என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்டக் கல்லூரி மாணவி போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்ட வாலிபர்கள்
- போலீசார் விசாரணை
- சமூக வலைதளங்களில் பெண்கள் போட்டோ பதிவிட வேண்டாம் என அறிவுறுத்தல்
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
ஆரணி அடுத்த சேதாரம் பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மாணவி நட்புடன் பழகி வந்தார். அந்த வாலிபருக்கு சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் நண்பராக இருந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவியின் செல்போன் வாட்ஸ் அப்பிற்கு வாலிபர் புகைப்படம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த புகைப்படத்தை மாணவி பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். மாணவியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மாணவி வாலிபரிடம் கேட்டபோது அவர் வேறு ஒரு நபரின் செல்போனில் இந்த புகைப்படம் இருந்தது அதை உனக்கு அனுப்பி உள்ளேன் அவரிடம் இருந்த புகைப்படம் உள்ளிட்ட அனைத்தையும் நான் கைப்பற்றி அழித்து விட்டேன்.
நீ கவலைப்படாதே என்று தெரிவித்துள்ளார். எனினும் சந்தேகம் அடைந்த மாணவி இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அதில் பெண்ணின் நண்பரும் அவரது நண்பரும் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதில் தொடர்புடைய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆரணி வாலிபரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆரணி வாலிபர் கைது செய்யப்பட்டால் தான் இதன் பின்னணியில் யார் உள்ளார். என்பது தெரியவரும். ஆபாச படத்தை சித்தரித்தது அவர் தானா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.
இதில் தொடர்புடைய ஆரணி வாலிபர் வேறு பெண்களுக்கு இதே போன்ற புகைப்படம் அனுப்பி உள்ளாரா? என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். பெண்கள் யாரும் தங்களது புகைப்படத்தை வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் பதிவிட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.






