search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கு தேடல் வேண்டும்
    X

    ஆசிரியர்களுக்கு தேடல் வேண்டும்

    • முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
    • மாவட்ட அளவிலான பணிமனை நடந்தது

    வேலூர்:

    பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் 50 ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனை நடந்தது.

    ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சி. அலமேலு வரவேற்று பேசினார்.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் என். ரமேஷ் மற்றும் துணைத்தலைவர் என். ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். மணிமொழி மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனையை தொடக்கி வைத்து பேசியதாவது:-

    பணிமனையில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் மிகச் சிறந்த தேர்வு வினா தயாரிப்பா ளராகத் திகழ வேண்டும்.

    நல்ல தரமான வினாக்களை தயாரித்து மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதன் மூலம் அனைத்து மாணவர்களையும் முழுமை பெறச் செய்து தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்களாக வர வேண்டும்.

    எந்த நேரத்திலும் கல்விப் பணி ஒன்றையே ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் வினாக்கள்தான் தமிழகத்திலேயே மிகச் சிறந்த வினாவாக இருக்க வேண்டும்.

    ஆசிரியர்களது வாழ்க்கையில் எப்போதும் தேடல் வேண்டும்.

    நிறைய புத்தகங்களை படியுங்கள். அதிக முயற்சி, கடுமையான பயிற்சி மேற்கொண்டு அரசுத் தேர்வுகளில் வேலூர் மாவட்டத்தின் தேர்ச்சியை 100 சதவீதம் பெறுவதற்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் சி. குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×