என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகாளய அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள காரிய மண்டபத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்தவர்களை படத்தில் காணலாம்.
வேலூர் பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
- மகாளய அமாவாசையொட்டி நடந்தது
- ஏராளமானோர் குவிந்தனர்
வேலூர்:
ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது.
முன்னோர்கள் கூட்டமாக வந்து நம்முடன் தங்கி இருந்து, அவர்களை நினைத்து நாம் வழிபாடு செய்யும் முறைகளை பார்த்து, மனம் குளிர்ந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள் என சொல்லப்படுகிறது.
மகாளய அமாவாசை ஒட்டி இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர். கொரோனோ தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கூட்டம் குறைவாக காணப்பட்டது.
ஆனால் இந்தாண்டு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர். பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.
மகாளய அமாவாசையொட்டி திருஷ்டி பூசணிக்காய் பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






