search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை
    X

    குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து அமலு விஜயன் எம்.எல்.ஏ. தலைமையில் கைத்தறி துணிநூல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.

    குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை

    • நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் முடிவு
    • விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என பல்லாண்டுகளாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்திற்கு குடியாத்தம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்ப டும் என வாக்குறுதி அளித்தார்.

    அதேபோல் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. சட்டமன்றத்திலும் குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோல் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 10 முக்கியமான கோரிக்கைகள் பட்டியலிலும் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கைத்தறி துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர மன்ற உறுப்பினர்கள் கே.வி. கோபாலகிருஷ்ணன், கவிதாபாபு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், எம்.எஸ்.குகன், ஏ.தண்டபாணி, சுமதிமகாலிங்கம், இந்துமதி கோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட கைத்தறி துணி நூல் அலுவலர் பி.முத்துராமலிங்கம் தலைமையில் கைத்த றித்துறை அதிகாரிகளும், குடியாத்தம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் பி.சரவணன் தலைமையில் சங்க நிர்வாகிகளும், குடியாத்தம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.அண்ணா மலை தலைமையில் நிர்வாகிகளும் கலந்து கொண்டு குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கலந்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது இந்த கலந்துரையாட கூட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கவும், அந்த ஜவுளி பூங்காக்களின் உட்கட்டமைப்பு, பொது வசதி மையம், தொழிற்கூட கட்டுமான செலவின தொகையில் 50 சதவீதம் அல்லது இரண்டு கோடி 50 லட்சம் ரூபாய் மாநில அரசு மானியமாக வழங்குவது குறித்தும் அதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த ஜவுளி பூங்கா அமைக்க குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலமும் குறைந்த பட்சம் 3 தொழில் கூடங்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஜவுளி பூங்கா அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×