என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறைந்த விலைக்கு கிரானைட் கற்கள் தருவதாக வியாபாரியிடம் ரூ.3 லட்சம் மோசடி
- வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
- வாட்ஸ்-அப்பில் வந்த தகவலை பார்த்து ஏமாந்தனர்
வேலூர்:
வேலூர் அருகே உள்ள நாயக்கனேரியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33) இவர் அடுக்கம்பாறை அடுத்துள்ள கட்டுபடி கூட்ரோட்டில் கிரானைட் கற்கள் விற்பனை செய்து வருகிறார்.
இவரது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் மொத்த விலையில் கிரானைட் விற்பனை செய்வதாக பதிவு ஒன்று வந்தது. அதில் வந்த செல்போன் நம்பரை ராஜேஸ் தொடர்பு கொண்டார். அப்போது மர்மநபர்கள் குறைந்த விலைக்கு கிரானைட் கற்கள் விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்தனர்.
இதனை நம்பிய ராஜேஷ் அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டார். அப்போது அவர்கள் கிரானைட் கற்கள் ரகங்கள் அடிப்படையில் குறைந்த விலைக்கு தருவதாக தெரிவித்தனர். மேலும் முன்பணம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை நம்பிய ராஜேஷ் காகித பட்டறையில் கிராணைட் விற்பனை செய்து வரும் அவரது நண்பர் ஒருவருக்கும் தகவல் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் மர்ம நபர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினர்.
அதற்குப் பிறகு அவர்கள் கூறியபடி கிரானைட் கற்கள் வந்து சேரவில்லை. மேலும் அவர்களை தொடர்பு கொள்ள முடிய வில்லை. அப்போதுதான் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் இருவரும் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்தனர்.
இது தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசில் ராஜேஷ் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது. எந்த காரணத்தைக் கொண்டும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்த வேண்டாம். தங்களுடைய வங்கி விவரங்களை யாருக்கும் கூற வேண்டாம் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.