search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலாற்றில் வெள்ளப்பெருக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு
    X

    விரிஞ்சிபுரம் பாலாற்றில் பாய்ந்து செல்லும் வெள்ளத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்ட காட்சி.

    பாலாற்றில் வெள்ளப்பெருக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு

    • ஆற்றை கடக்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை
    • ஏரிகளுக்கு நீர் திருப்பிவிடப்பட்டுள்ளது

    வேலூர், டிச.16-

    மாண்டஸ் புயல் தாக்கத்தால் வட தமிழகத்தில் கன மழை பெய்த நிலையில், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பரவலான கனமழையும் பெய்தது. இதன் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    இந்த நிலையில் ஆந்திராவில் பாலாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பாலாற்றுக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்து வருகிறது. பாலாற்றில் நேற்று முன்தினம் 3 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று காலை அது 4 ஆயிரம் கன அடியாக இருந்தது.நேற்று இரவு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    இதில், புல்லூர் தடுப்பணையில் இருந்து அதிகபட்சமாக 4,980 கன அடிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    வாணியம்பாடி மண்ணாற்றில் இருந்து 300, கல்லாற்றில் இருந்து 100, மலட்டாற்றில் இருந்து 950, அகரம் ஆற்றில் இருந்து 425 கன அடி வீதம் பாலாற்றுக்கு வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.

    கவுன்டன்யா ஆற்றில் இருந்து மோர்தானா அணைக்கு 700 கன அடிக்கு நீர்வரத்து இருக்கும் நிலையில் கொட்டாற்றில் இருந்து 50 கன அடி தண்ணீர் கவுன்டன்யா ஆற்றில் தட்டப்பாறை அருகே கலக்கிறது. இதன் மூலம் குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் 750 கன அடிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அதேபோல், பேயாற்றில் இருந்து பள்ளிகொண்டா ஏரிக்கு நீர்வரத்து இருப்பதால் ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் 30 கனஅடிக்கு வெளியேறி பாலாற்றில் கலக்கிறது.

    ஆம்பூர் அருகே வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் இருந்து பாலாற்றுக்கு மொத்தம் 55 கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உற்பத்தியாகும் நீவா நதி என்ற பொன்னையாற்றில் 1,150 கன அடிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநில எல்லையில் உள்ள கலவகுண்டா அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் நீர்வரத்து அதிகரித்தது. வெள்ளப்பெருக்கால் ஏற்கனவே ஆம்பூர் வாணியம்பாடி பகுதியில் 3 தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. இந்த பாலங்களில் சிலர் ஆபத்தை உணராமல் கடந்து வருகின்றனர். இதனை தடுக்க தற்போது அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பாலாற்றில் நேற்று திடீரென அதிகரித்த வெள்ளப்பெருக்கால் செதுவாலை ஏரிக்கு 110 கன அடிக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால், ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

    பாலாற்றில் 6 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து இருப்பதால் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

    Next Story
    ×