என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட வந்த காட்சி.
கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர எதிர்ப்பு
- கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
- ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
வேலூர்:
காட்பாடி அடுத்த 55 புத்தூர் கிராமத்தில் ஸ்ரீ அசரீர் மலை முருகன் கோவில் உள்ளது. ஆடி கிருத்திகை, தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் மட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் கிருத்திகை, சஷ்டி தினத்தன்று இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
பொதுமக்கள் நிர்வாகித்து வரும் இந்த முருகன் கோவிலை, இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இந்து முன்னணியினருடன் சேர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் பொதுமக்கள் சத்துவாச்சாரி மேம்பாலத்தில் இருந்து, கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அங்கு அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்.
அப்போது போராட்டக்காரர்கள் கோவில் நிர்வாகத்தை இந்து முன்னணி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகம் உள்ளே சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அந்த பகுதியை சேர்ந்த சிலர் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் முருகன் கோவிலை கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.
நல்ல வருவாய் ஈட்டும் இந்த கோவிலை, பொதுமக்களே நிர்வகிக்க அனுமதி வழங்க வேண்டும். அறநிலை துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியை கைவிட வேண்டும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டிருந்தது.






