என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய பஸ் நிலைய கடைகள் நாளை ஏலம்
- வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன
- ஏ.டி.எம். திறக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
அவற்றில் 7 கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்கள் அறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு சில கடைகள், ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மீதமுள்ள 68 கடைகள் ஏலம் விடப்பட உள்ளது. அதிக வாடகை மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏலம் விடாமல் ஒத்திவைத்தனர்.பஸ் நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஏற்கனவே 4 தடவைக்கு மேல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் நாளை வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கடைகள் ஏலம் தொடர்பான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
இதனை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். மாநகராட்சி விதியில் கூறியுள்ளபடி வைப்புத் தொகை மற்றும் முன்பணம் செலுத்த அறிவுறுத்தினர்.
புதிய பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகள் அமர்ந்து தண்ணீர் குளிர்பானம் பிஸ்கட் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.சில வியாபாரிகள் விற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது.
பெரும்பாலும் நீண்ட தூரப் பயணிகள், வளாகத்தில் வியாபாரிகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்பட பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்க முடியவில்லை.
இதனால் அதிக அளவு விலை கொடுத்து பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே கடைகளை விரைந்து திறக்கவும், புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஏ.டி.எம்.களை அமைக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.






