என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகநதி ஆற்றை நீந்தி, கடந்து சென்ற பொதுமக்கள்.
தொடர் மழையால் நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
- பொதுமக்கள் நீந்தி சென்ற அவலம்
- மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், கணியம்படி ஒன்றியத்துக்கு உட்பட்ட துத்திக்காடு ஊராட்சி, வெங்கலபாறை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்களும் நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முகப்பை அருகில் தான் ஆற்றை கடந்து தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.
மழைக்காலங்களில் ஆற்று நீரை கடந்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் நஞ்சுண்டாபுரம் பஸ் நிறுத்தம் வந்து அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்கின்றனர்.
இவர்கள் நாகநதி, கணியம்பாடி மற்றும் நஞ்சுண்டாபுரம் செல்ல சுமார் 8 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வெங்கலப்பாறை கிராம மக்கள் ஆஞ்சநேயர் கோயில் முகப்பை அருகேதான் ஆற்றில் இறங்கி தண்ணீரை கடந்து சிமரத்துடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கணியம்பாடி, நஞ்சுண்டாபுரம், நாகநதி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகநதி ஆற்றில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது கிராம மக்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நாகநதி ஆற்றை கடந்து சென்றனர். இதில் நஞ்சு கொண்டாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்யும் பணியாளர் செல்வம் (வயது 56) நேற்று வழக்கு போல் வேலைக்கு வந்தார்.
வேலை முடிந்து மாலை 6 மணி அளவில் வீட்டுக்கு செல்ல ஆஞ்சநேயர் கோவில் முகப்பை அருகே சென்றார். ஆற்றில் இறங்க முடியாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் மழை நீர் குறையும் என அங்கேயே காத்திருந்தார். ஆற்றில் மழை வெள்ளம் குறையாததால் நேற்று இரவு 8 மணியளவில் அவர் தான் உடுத்திருந்த உடைமைகளை கழட்டி கையில் வைத்துக் கொண்டு, மார்பளவு தண்ணீரில் இறங்கி நீந்தி ஆற்றைக் கடந்து வீட்டுக்கு சென்றார்.
நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி, மேதலபாடி கிராமத்தில் உயிரிழந்த கண்ணன் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகியோர் உயிரிழந்தபோது அவரது உறவினர்கள் ஆற்று தண்ணீரில் இறங்கி உடலை தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகநதி ஆற்றை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். நாகநதி ஆற்றைக் கடந்து செல்ல ஏதுவாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






