என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் கால்வாய் பணிகள் முடிந்த இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம்
    X

    வள்ளலாரில் மழை வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவை மீட்ட காட்சி.

    வேலூரில் கால்வாய் பணிகள் முடிந்த இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம்

    • ஒரு மணி நேர மழைக்கே தாங்காத சாலைகள்
    • வாகன ஓட்டிகள் அவதி

    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது.இரவு நேரங்களிலும் வெப்ப காற்று வீசியது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. வேலூரில் அதிகபட்சமாக 63 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இதேபோல் காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    மழை காரணமாக வேலூர் மாநகர சாலைகளில் ஆறு போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அண்ணா சாலையில் திருப்பதி தேவஸ்தானம், தெற்கு போலீஸ் நிலையம், கிரீன் சர்க்கிள் பகுதி ஆகிய இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    இது ஒரு புறம் இருக்க வேலூர் மாநகர பகுதியில் உள்ள தெருக்கள் ஒரு மணி நேரத்திற்கு கூட தாங்கவில்லை. அனைத்து தெருக்களிலும் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது.கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை போடப்பட்ட தெருக்களிலும் மழை வெள்ளம் சரியாக வடியாமல் குளம் போல தேங்கி கிடந்ததை காண முடிந்தது.

    சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் இருபுறமும் கால்வாய் பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது.ஆனால் டபுள் ரோட்டில் குளம் போல தண்ணீர் தேங்கி கிடந்தது. இந்த வெள்ளம் வடிய 2 மணி நேரத்திற்கு மேலானது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    சத்துவாச்சாரி நேதாஜி நகரை அடுத்துள்ள ஸ்ரீ சக்தி நகருக்கு செல்லும் வழியில் தண்ணீர் அதிகளவு தேங்கி கிடந்தது. அந்த பகுதியில் தற்போது சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    காட்பாடியில் சாலை பணிகள் நடைபெறாத தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சியளித்தன.

    வள்ளலார்பகுதியில், எஸ்.பி.ஐ வங்கிக்குச் செல்லும் சாலையில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    அதில் ஆட்டோ ஒன்று சிக்கிக் கொண்டதால் அதனை மீட்க பொதுமக்கள் படாதபாடு பட்டனர். சாலை அமைக்கும் பணியில் மெத்தனம் காட்டுவதன் விளைவே இம்மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ள காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    பருவ மழைக்கு முன்பாக சாலைகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும். ஏற்கனவே கால்வாய் மற்றும் சாலை பணிகள் முடிந்த இடங்களிலும் தண்ணீர் குளம் போல தேங்கி இருக்கிறது. இதனை கண்டறிந்து மீண்டும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×