என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரிக்கரையோரம் உள்ள இருளர் இன மக்களை படத்தில் காணலாம்.
ஏரியில் 3 தலைமுறைகளாக குடியிருக்கும் இருளர் இன மக்கள்
- மழைக்காலத்தில் பரிதவிக்கும் அவலம்
- மாற்று இடம் கேட்டு அரசிடம் கோரிக்கை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், வல்லண்டராம் பகுதியில் உள்ள செதுவாலை ஏரியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இவர்கள் 3 தலைமுறையாக இந்த ஏரியில் சிறிய குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
இவர்கள் அமைத்துள்ள இந்த சிறிய குடிசையில் உள்ளேயே சமையல் செய்வதோடு, அதிலேயே படுத்து உறங்குவது என இவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் குடியிருக்கும் பகுதி ஏரி என்பதால் மழை பெய்யும் போதெல்லாம் இந்த ஏரி நிரம்பி இவர்கள் கட்டியிருக்கும் குடிசைக்குள் தண்ணீர் புகுந்து முழுமையாக சூழ்ந்து விடுகிறது.
அப்போது குழந்தைகளுடன் அந்தப் பகுதி மக்கள் பரிதவிக்கின்றனர். அந்த சமயத்தில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து விட்டால், வெளியேறும் வரை அதிலேயே மிகவும் சிரமத்துடன் வாழும் பரிதாப நிலை நீடிக்கிறது.
மழைக்காலங்களில் நோய் தொற்று காரணமாகவும், விஷ பூச்சி கடித்து குழந்தை உயிரிழந்தது என அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
விறகு வெட்டியும், சாலைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு இவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
3 தலைமுறையாக ஏரியில் வசிக்கும் இவர்கள், மாற்று இடம் கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இவர்கள் வாழ்வதற்கு ஏற்றது போல் மாற்று இடம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






