என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல்
    X

    வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல்

    • வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது
    • போலீஸ் குவிப்பு-பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி தலைமை தாங்கினார்.

    தேர்தல் நடந்த கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் முகமது சகி ஆகியோர் அனுமதிக்க ப்பட்டனர்.

    பின்னர் கூட்டரங்கு கதவுகள் மூடப்பட்டது. யாரும் உள்ளே செல்லாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட மாநகராட்சியில் இன்று நடந்த தேர்தலின் போது 55 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். இந்த தேர்தலில் கவுன்சிலர்கள் 10 பேர் போட்டியிட்டனர்.

    வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது .இதில் கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக சென்று வாக்கு பட்டியில் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் சக்கரவர்த்தி சித்ரா, சுதாகர் ,சேகர், நித்திய குமார், முருகன், ரஜினி, சண்முகம் மற்றும் கவுன்சிலர் அஸ்மிதா ஆகியோர் மாநகராட்சி மேல் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. கவுன்சிலர் சரவணன் 11 வாக்குகளை பெற்றதால் தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 7 பேர் உள்ளனர். இந்தநிலையில் கூடுதலாக தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் சரவணனுக்கு ஆதரவாக ஓட்டளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சியில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தலையொட்டி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தால் பரபரப்பாக காணப்பட்டது.

    வரி விதிப்புக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் புதிய கட்டிடங்கள் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, சொத்து வரி, தொழில் வரி பிற வரிகள் விதிப்பு, நில உரிமை மாற்றம் மாநகராட்சி நிலங்களை வேறு துறைகளுக்கு குத்தகைக்கு அனுமதித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிதி நிலை கட்டுப்பாடு, வரவு, செலவு திட்டம் பரிசீலித்தல் போன்றவை மேற்கொள்ள உள்ளது.

    Next Story
    ×