என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்
- வேலூர் மாவட்ட தனியார் மழலையர் தொடக்கப்பள்ளிகள் நல சங்கம் வலியுறுத்தல்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்ட தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் நல சங்க ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நடந்தது.
கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் முரளி, செயலாளர் சிவபெருமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். வரும் ஆண்டுகளில் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு பணத்தை அதே கல்வியாண்டில் வழங்க ஆவண செய்ய வேண்டும்
பள்ளிகளுக்கு சுகாதார சான்று இணையதளம் வழியாக பெற அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இணையதளம் வழியாக பள்ளிகளின் புதுப்பித்தல் கருத்துருக்கள் ஏற்கப்பட்டு சான்று வழங்க வேண்டும்.
மாணவர்கள் மாற்று சான்றிதழ் இன்றி எந்த பள்ளியிலும் சேர்க்கை செய்ய அனுமதிக்க கூடாது. பாலர் வகுப்பு, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்களுக்கு ஆதார் எண் இணைக்க தடை செய்ய வேண்டும். ஏற்கனவே அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் அனுமதி பெற்று பல ஆண்டுகளாக இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும் டி.டி.சி.பி யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இனி புதிய பள்ளிகளுக்கு மட்டுமே டி.டி.சி.பி அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சைமன் நன்றி கூறினார்.






