என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அருகே பிடிபட்ட சந்தன மரக்கட்டைகள்
சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
- போலீசார் மடக்கி பிடித்தனர்
- 9 கட்டைகள், கத்தி பறிமுதல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஏட்டுகள் மோசஸ், சுரேஷ் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரோந்து சென்றனர்.
குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் ஆற்றோரம் ரோந்து சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார.
போலீசார் அந்த மர்ம நபர் அருகில் சென்றதும் அவர் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு இருட்டில் தப்பி ஓடி விட்டார். போலீசாரும் விரட்டிச் சென்றனர் அந்த நபர் நேரத்தில் இருட்டில் ஓடி தப்பிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த மர்ம நபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு மூட்டையில் 9 சந்தனமர கட்டைகளும் அதை வெட்ட பயன்படுத்திய கத்தியும் இருந்தன.
இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தன மரக்கட்டைகளையும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
தப்பி ஓடிய மர்ம நபர் குறித்தும் சந்தன மரக்கட்டைகள் எங்கிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்டது, எங்கு கொண்டு செல்ல இந்த வழியாக வந்தனர், இந்த கும்பல் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தன மரக் கட்டைகளை பிடித்த குடியாத்தம் டவுன் போலீசாரை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் பாராட்டினர்.






