என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடி கழிஞ்சூர் ஏரியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.
ஏரி பகுதியில் குப்ைப கொட்டும் மாநகராட்சி லாரிகளை பறிமுதல் செய்யுங்கள்
- அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
- பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள காட்பாடி, குடியாத்தம், ஆற்காடு, ஜோலார்பேட்டை, ஆம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் ஏரிகள், தடுப்பணைகள், வெள்ளத்தடுப்புக்கரை புதியதாக அமைக்கும் பணிகள் மற்றும் புனரமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டு விழா காட்பாடி கழிஞ்சூரில் இன்று நடந்தது.கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை ரூ.139.21 கோடியில் புணரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்.
மேலும் இந்த திட்டத்தில் கழிஞ்சூர் ஏரி ரூ.28.5 கோடியில் சுற்றுலா தலமாக மாற்றப்படுகிறது.இந்த பணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
ஏரிகளை புனரமைக்கும் பணி காட்பாடி தொகுதியில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள 8 ஏரிகளில் செய்வதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாத்தலமாக்க அடிக்கல்
கழிஞ்சூர் ஏரி சுற்றுலாத்தலமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இங்கே உள்ள கரையை மேம்படுத்தி வாக்கிங் செல்ல வசதியாக மாற்றப்படும். ஏரியில் மலர் தோட்டங்கள், நடுவில் செயற்கை தீவு, படகு சவாரி கழிவறை வசதி செய்யப்படும். ஏரி கால்வாய் பகுதியில் உள்ள குடியிருப்புகளை இந்த பணிகளுக்காக அகற்ற வேண்டி உள்ளது. அவர்களுக்கு மாற்று இடம் தந்துவிட்டு அதற்கு பிறகு அவர்கள் இந்த இடத்தை விட்டு காலி செய்யப்படுவார்கள்.
கழிஞ்சூர் ஏரி பகுதியில் கலைஞர் ஆட்சி காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர திட்டமிட்டேன். அதற்குள் எங்கள் ஆட்சி மாறிவிட்டது. இந்த ஏரிக்கு மேல் புதிய டவுன்ஷிப் ஒன்று கொண்டு வர முயற்சி செய்தேன்.ஆட்சி மாற்றத்தால் அதுவும் எங்கே போனது என்று தெரியவில்லை.
இந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும். இங்கு குப்பை கொட்ட வந்தால் மாநகராட்சி லாரியை பறிமுதல் செய்துவிட்டு எனக்கு ஒரு போன் செய்யுங்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. பொன்னையில் ரெயில்வே பாலம் அருகே தனியார் கம்பெனி குப்பைகளை குவித்து வைத்துள்ளனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ரூ.300 கோடியில் ஏரிகளை தூர் வாருவதாக கூறினார்கள். அந்த ஏரிகளின் பட்டியலை கேட்டேன். கடைசி வரை அவர்கள் தரவே இல்லை. அனைத்து பணிகளையும் ஒருவருக்கே டெண்டர் விட்டார்கள்.ரூ.250 கோடியை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். மீதிரூ.50 கோடியை டெண்டர் எடுத்தவர் எடுத்துக் கொண்டார். எங்கள் ஆட்சியில் அப்படி நடக்க முடியாது. 10 ஏரிகளுக்கு ஒரு கான்டிராக்ட் பணிகளை விடுகிறோம். அதில் திருப்தி இருந்தால் மட்டுமே மற்ற பணிகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
நடைபயிற்சி
குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றங்கரையில் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் கரைகளை மேம்படுத்தி நடை பயிற்சி பூங்கா அமைக்கப்படும்.
தண்டல கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வஞ்சூர் சேண்பாக்கம் இடையே பாலாற்றில் தரை பாலம் அமைக்கப்படும்.
பத்திரப்பள்ளி அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது அந்த பணிகள் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சதுப்பேரி ஏரி சுற்றுலா சுற்றுலா தலம் ஆக்கப்படும் மேலரசம்பட்டு புதிய அணை கட்டும்பணி இந்த ஆண்டு தொடங்கப்படும்.
ஆற்காடு கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்றவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், ஈஸ்வரப்பன், அமுலு விஜயன், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், வேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், மாநகராட்சி 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா, வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






