search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.எம்.சி. சுரங்கப்பாதைக்கு கட்டாயம் இடம் தர வேண்டும்
    X

    வேலூர் கோட்டை மைதானத்தில் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த காட்சி. அருகில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதாஆனந்தகுமார்.

    சி.எம்.சி. சுரங்கப்பாதைக்கு கட்டாயம் இடம் தர வேண்டும்

    • சி.எம்.சி. சுரங்கப்பாதைக்கு கட்டாயம் இடம் தர வேண்டும்
    • வேலூரில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை அமைச்சர் எ.வ. வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 20 மற்றும் 21-ந் தேதியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு முதல்அமைச்சர் மு. க ஸ்டாலின் வருகிறார். 20-ந் தேதி மாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரியை திறந்துவைக்கிறார். பின்னர் ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    21-ந் தேதி காலை திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் பல்வேறு கட்டிடங்களை திறப்பு விழா நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    21-ந்தேதி மாலை வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    2 நாள் நிகழ்ச்சியில் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தில் உள்ள மக்களை முதல்அமைச்சர் சந்திக்கிறார்.

    தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. இதனால் பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மாதனூர், விரிஞ்சிபுரத்தில் கட்டப்பட்டிருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

    மாதனூர் பாலாற்றில் ரூ.30 கோடி, விரிஞ்சிபுரம் பாலாற்றில் ரூ. 27 கோடியில் மேம்பாலங்கள் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இந்த ஆண்டே பணிகள் தொடங்கப்படும்.

    வேலூர் ஆற்காடு சாலையில் சிஎம்சி ஆஸ்பத்திரி முன்பு சுரங்கப் பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஎம்சி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    சிஎம்சி நிர்வாகத்தினர் தாங்களாகவே முன்வந்து நிலத்தை கொடுத்தால் உடனடியாக பணிகள் தொடங்கப்படும். அல்லது எங்களுக்கு உள்ள நில எடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இதற்கான தொகையை வழங்கி நிலத்தை எடுத்து கண்டிப்பாக சுரங்கப்பாதை அமைக்கப்படும்.

    சத்துவாச்சாரி காங்கேயநல்லூர் இடையே தரைப்பாலம் அமைப்பதற்கு நில எடுப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து உள்ளது.

    இதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு இந்த ஆண்டு அந்த இடத்திலும் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் ,கோவை, மதுரை, போல பழம்பெரும் நகரமான வேலூரில் பெரிய மேம்பாலங்கள் அதாவது மேலே செல்லும் சாலைகள் அமைக்க வேண்டுமென எம்‌.எல்‌ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    வேலூரில் பெரிய மேம்பாலங்கள் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை துறை ரீதியாக ஆய்வு செய்து மேம்பாலங்கள் அதாவது மேலே செல்லும் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க‌. மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×