என் மலர்
உள்ளூர் செய்திகள்

சி.எம்.சி ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் விக்ரம் மேத்யூ பேட்டி அளித்த காட்சி.
சி.எம்.சி. வளாகத்தில் அனைத்து பிரிவுகளும் வழக்கம்போல் செயல்படுகிறது
- இயக்குனர் விக்ரம் மேத்யூஸ் தகவல்
- வேலூர் வளாகம் தான் எப்போதும் தலைமையிடமாக செயல்படும்
வேலூர்:
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி இயக்குனர் விக்ரம் மேத்யூஸ் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் புதிய கிளை ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் திறக்கப்பட்டு முழுமையாக செயல்பட்டு வருகிறது. சில சிறப்பு துறைகள் முதன்மையாக ராணிப்பேட்டை வளாகத்திலும் மற்றவை வேலூர் வளாகத்திலும் செயல்படுகின்றன.
வேலூர் வளாகத்தில் உள்ள சில கட்டிடங்கள் மிகவும் பழமையானதாகவும் சுண்ணாம்பு சுவர்களை கொண்டதாகவும் உள்ளது.
இந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் 6 மாத காலத்தில் தொடங்கப்பட உள்ளது. எத்தகைய பிரச்சினை உள்ள நோயாளியும் அவசர உதவிக்கு இந்த இரண்டு வளாகங்களில் உள்ள அவசர சிகிச்சை பிரிவை அணுகலாம்.
வேலூர் வளாகத்தில் இருந்து வழக்கம்போல் அனைத்து பிரிவுகளும் செயல்படும். சில நோயாளிகள் சிறப்பு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் எங்களுடைய 2 வளாகங்களுக்கு இடையே மாற்றப்படலாம். 2 வளாகங்களிலும் நெஞ்சு வலிக்கான சேவைகள் வழங்கப்படுகிறது. எங்களுடைய இருதய நோய் நிபுணர்களால் வேலூர் டவுன் வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும்.
வேலூர் வளாகத்தில் இருந்து அனைத்து துறைகளும் ராணிப்பேட்டை வளாகத்திற்கு மாற்றப்பட்டு விட்டதாக வதந்தி பரவுகிறது. இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தற்போது 13 துறைகள் மட்டுமே ராணிப்பேட்டை வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்னும் 2 ஆண்டுகளில் வேலூர் சிஎம்சி வளாகம் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உலக தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது. சிஎம்சி ஆஸ்பத்திரியை பொறுத்தவரையில் வேலூர் வளாகம் தான் எப்போதும் தலைமையிடமாக கொண்டு செயல்படும்.
சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சி.எம்.சி.ஆஸ்பத்திரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் உடன் இருந்தார்.






