என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடியில் சீரமைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கியது
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- கனரக லாரிகளுக்கு அனுமதி இல்லை
வேலூர் :
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுது சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து மேம்பாலத்தில் 3 இணைப்புகளில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் வகையில் ரப்பர் பேடு இரும்புச் சட்டம் கம்பிகள் பொருத்தப்பட்டன.
அதோடு இணைப்பை உறுதி செய்யும் வகையில் அந்த பகுதியில் கெமிக்கல் மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு பேக்கிங் செய்யப்பட்டது.
இந்த பணிகள் அனைத்தும் கடந்த 18-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இணைப்பு பகுதியில் செய்யப்பட்ட பணிகள் செட் ஆவதற்கு 10 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ரெயில்வே பாலத்தின் மீது கனரக வாகனங்களை இயக்கி சோதனை செய்தனர்.
அப்போது இதற்கு முன்னர் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்ற போது ஏற்பட்ட அதிர்வுகள் சீரமைக்கும் பணி முடிந்த பிறகு ஏற்படவில்லை. அதோடு போக்குவரத்துக்கும் பாலம் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1-ந் தேதி முதல் ரெயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை முதல் ரெயில்வே மேம்பாலத்தில் பஸ் மினி லாரி உள்ளிட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியதாவது;-
காட்பாடி ரெயில்வே பாலத்தில் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.சாதாரண வாகனங்கள் இந்த பாலத்தில் எப்போதும் போல் செல்லலாம்.
தற்போது கனரக சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை.சரக்கு வாகனங்கள் இயக்குவது குறித்து தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்காலிக பாதைகளில் கனரக லாரிகள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் 300 படுக்கை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தனியார் ஆஸ்பத்திரியிலும் படுக்கைகளை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.






