என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு
    X

    நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம்.

    ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு

    • ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
    • 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி ரங்கப்பன்கொட்டாய் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாஉமாபதி தலைமை தாங்கி, கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    தொடர்ந்து, ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும் ஊராட்சிக்கு சொந்தமான பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.

    அதனை அகற்ற 4 மாதத்திற்க்கு முன்பு அதிகாரிகள் அனைவரும் அனுமதி வழங்கியபிறகும் கூட தற்போது வரை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளது. எனவே ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி ஏரியை தூர் வார வேண்டும்.

    உத்திர காவேரி ஆற்றில் இருந்து ஒடுகத்தூர் வழியாக ஏரிக்கு தண்ணீர் எடுத்துவர அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும். இல்லை என்றால் வருகிற அக்டோபர் மாதம் நடைப்பெறும் கிராமசபை கூட்டத்தை அனைவரும் புறக்கனிக்கப்போவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 10 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 15 மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் முதியோர் உதவி தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மேலும், புதிய வீடு கேட்டு 30-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். இதற்கு அடுத்த 2 மாதத்திற்க்குள் அனைவருக்கும் வீடு கட்ட அனுமதி பெற்றுதரப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் கூறினர்.

    மேலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலா 2 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    அதேபோல் முதியோர்களுக்கு மூட்டு வலி போக்கும் நிவாரணி, அனைத்து பெண்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×