என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையை மறித்து வைக்கப்பட்டுள்ள முள்வேலி தடுப்புகள்.
ஆற்காடு சாலையில் முள்வேலி தடுப்புகள்
- கடும் நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு
- சத்துவாச்சாரியில் வாகன ஓட்டிகள் திணறல்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ராணிப்பேட்டை மார்க்கமாக வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வர தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சென்னை சில்க்ஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் இறங்கும் வழிப்பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் சத்துவாச்சாரி ஆவின் அருகில் உள்ள பாதை வழியாக அதிக அளவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் சாலைக்கு வருகின்றன.
இதன் காரணமாக சத்துவாச்சாரியில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் சத்துவாச்சாரி பொதுமக்கள் தற்போது படாத பாடு படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதற்கிடையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு அடிக்கடி ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டம் நடத்தப்படுகிறது.
அந்த இடத்தில் தற்காலிகமாக இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த இரும்பு தடுப்புகளைக் கொண்டு சத்துவாச்சாரியிலிருந்து காகிதபட்டறைக்கு செல்லும் பாதை முழுமையாக மூடப்பட்டுள்ளது.
அனைத்து வாகனங்களும் கலெக்டர் அலுவலக சிக்னல் பகுதிக்கு வந்து காகிதப்பட்டறைக்கு திரும்பிச் செல்ல வேண்டி உள்ளது. அந்த இடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
அதே இடத்தில் நின்று போக்குவரத்தை போலீசார் சீரமைத்து வருகின்றனர். ஆனால் ஆஞ்சநேயர் கோவில் முன்பு சாலையை மூடப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை அவர்கள் திறந்து விடவோ அகற்றவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலீசாரின் இந்த செயல் வாகன ஓட்டிகளுக்கு அவதியை ஏற்படுத்தி உள்ளது. சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கடந்து வர சும்மாவே படாதபாடு படுகிறோம். இது போதாது என்று போலீசார் சாலையை மூடி மேலும் நெரிசல் ஏற்படுத்துகின்றனர்.தடுப்புகளை அகற்றி சாலையை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






