என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி கிருத்திகை கோலாகலம்

    • முருகர் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
    • ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி சாத்துப்படி செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிறப்பு வழிபாடு

    ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    அதேபோல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமி, வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.

    காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசுவாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோவில், கைலாசகிரிமலை கொசப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில், திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பேர்ணாம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், வளையாம்பட்டு பழனி யாண்டவர் கோவில், ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோவில், ஏலகிரி மலை பாலமுருகன் கோவில், அணைக்கட்டு மூலைகேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை வடதிருச்செந்தூர் முருகன் கோவில், கம்மவான்பேட்டை முருகர் கோவில், தம்டகோடி மலை முருகர், தட்டமலை முருகர் கோவில், ரெட்டிபாளையம் முருகர் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் ஆடிகிருத்திகை முன்னிட்டு பூக்காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி, பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து 'அரோகரா' கோசமிட்டபடி பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கோவில்களில் காவடி தண்டி சாத்துபடி செய்யும் இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பக்தர்கள் வெள்ளி வேல் அலகு குத்தியும், சிறிய மற்றும் பெரிய தேரை இழுத்து வந்தும், அந்தரத்தில் தொங்கிய படி பறக்கும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருத்தணி செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதேபோல் வள்ளிமலை ரத்தினகிரி உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அணைக்கட்டு பகுதியில் உள்ள தென்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ மயில்வாகன மலை முருகப்பெருமான், மூலைகேட் பகுதியில் அமைந்துள்ள வேலாடும் தனிகைமலை அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோயில், முத்துக்குமாரன் மலையில் அமைந்துள்ள முருகப்பெருமான் ஆகிய கோயில்களில் வழக்கம் போல் நேற்று முதலே திருவிழா கலைக்கட்ட தொடங்கியது. இதில் இன்று திரளான பக்தர்கள் காவடிகள் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    Next Story
    ×