என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக்கில் சென்றபோது திடீரென மரம் சாய்ந்ததில் காயமடைந்த மின் ஊழியர் பலி
- மகனுக்கு தீவிர சிகிச்சை
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி ஊராட்சி வி.மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவர் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேலாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் வெங்கடேசன் தனது மகன் கோபிநாத் (21) உடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தத்தில் இருந்து தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
ராமாலை தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பலத்த மழை பெய்தது.
அப்போது சாலை ஓரம் இருந்த மரம் ஒன்று தந்தை மகன் சென்று கொண்டிருந்த பைக்கின் மீது திடீரென சாய்ந்தது.
இதில் வெங்கடேசன் மற்றும் கோபிநாத் இருவரின் தலை மீது விழுந்து அப்படியே நசுக்கியது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மரத்தை அப்புறப்படுத்தினர்.
படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் மற்றும் அவரது மகன் கோபிநாத் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு தந்தை மகன் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான மின்வாரிய ஊழியர் வெங்கடேசனுக்கு அமுதா என்ற மனைவியும் 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் கோபிநாத் தந்தையுடன் விபத்தில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.






