என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரவலாக பெய்த மழையால் விவசாய பணிகள் தீவிரம்
- அதிகபட்சமாக 58.2 மில்லி மீட்டர் மழை பதிவானது
- வேலூரில் தெருக்களில் திடீர் பள்ளங்களால் அவதி
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
வேலூர் காட்பாடி மாநகரப் பகுதியில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகள் நடந்து வரும் தெருக்களில் கூடுதலாக சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன.
வேலூர், சத்துவாச்சாரி, வேளாளர் தெருவில் உள்ள விநாயகர் கோவில் அருகே தெருவில் நீளமாக பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் மழைநீர் தேங்கியது. அந்த வழியாக குறிஞ்சி நகர் முல்லை நகர் பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் கூட பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் தெருக்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, காவேரிபாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது.ஆற்காட்டில் அதிகபட்சமாக 58.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.திருப்பத்தூர் நகர பகுதியில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக மாவட்டத்தில் ஜோலார்பேட்டையில் 57 மில்லி மீட்டர் மழை பதிவானது. பலத்த மழை காரணமாக கானறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வேலூர் 7.4 காட்பாடி 7, மேல் ஆலத்தூர் 14.8, திருவலம் 7.4,குடியாத்தம் 2, திருப்பத்தூர் 12, ஜோலார்பேட்டை 57, நாட்டறம்பள்ளி 28,ஆம்பூர் 43, வாணியம்பாடி 26,ஆலங்காயம் 32, வாலாஜா 13.5, அரக்கோணம் 9.2, ஆற்காடு 58.2, காவேரிப்பாக்கம் 31, அம்மூர் 4, சோளிங்கர் பகுதியில் மழை இல்லை.






