என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஜயதசமியையொட்டி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் அரிசியில் மாணவர்கள் அ எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடந்தது.
விஜயதசமியையொட்டி அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
- நெல், அரிசியில் ‘அ’ எழுதி சேர்த்தனர்
- பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது
வேலூர்:
விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை காரணமாக, பெற்றோர் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம்.
விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை.
குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இன்று விஜயதசமியை முன்னிட்டு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வித்யாரம்பம் நடைபெற்றது. பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைக்கு முதன் முதலாக எழுத கற்றுக் கொடுத்து, பள்ளியிலேயே சேர்த்தனர்.
வேலூர் மாவட்டத்தில் 510 அரசு தொடக்கப்பள்ளி, 151 அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 118 அரசு உதவி பெறும், தனியார் தொடக்கப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடந்தது.
குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து நெல், அரிசி போன்றவற்றில் 'அ' எழுத வைத்து பெற்றோர்கள் பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வமுடன் கொண்டு வந்து சேர்த்தனர்.






