என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடியோவில் பதிவாகியுள்ள சிறுத்தை.
மீண்டும் சிறுத்தை நடமாடுவதாக வீடியோ வைரல்
- பொதுமக்கள் அச்சம்
- வனத்துறையினர் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊனை மோட்டூர் கிராமத்தில் கடந்த மாதம் ஒருவரின் வீட்டின் முன்பு பூனை இறந்து கிடந்தது. அந்த பூனை எப்படி இறந்தது என்பதை அறிய, வீட்டின் உரிமையாளர் தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.
அதில் வீட்டின் வாசலில் இருந்த பூனையை ஏதோ பெரிய விலங்கு ஒன்று கடித்து குதறிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த விலங்கு சிறுத்தை போல் உள்ளது. அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.
மேலும் 13 பேர் கொண்ட வனத்துறையினர் ஊனை மோட்டூர், ஏரிப்புதூர், நாராயிணபுரம், கவுதமபுரம், ஊனை வாணியம்பாடி, ஊனை, ஊனை பள்ளத்தூர், பெரிய ஊனை, கந்தனேரி, அணைக்கட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பூனையை கொன்றது சிறுத்தை இல்லை, நாய் என்று வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனை அடுத்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் வனப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்து தூக்கத்தை இழந்த தவிக்கின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அணைக்கட்டு பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
அணைக்கட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மற்றும் ஏரிப்புதூர் கிராமத்திலும் தற்போது சிறுத்தை நடமாட்டம் இல்லை.இந்த வீடியோ முற்றிலும் தவறானது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.
சமூக விரோதிகள் யாரோ ஒரு சிலர் செய்த தவறுகளால் தற்போது பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இது போன்ற பொய்யான பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.






