என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மீது லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை நசுங்கி சாவு
- பணிக்கு சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் கொணவட்டம் பெருமாள் நகரை சேர்ந்தவர் வேலு (வயது 74). இவரது மகள் நிவேதா (34) ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
தினமும் நிவேதாவை அவரது தந்தை வேலு தனது பைக்கில் புதிய பஸ் நிலையம் அழைத்துச் சென்று விடுவார்.
அங்கிருந்து பஸ் மூலம் பள்ளிக்கு நிவேதா சென்று வந்தார். இன்று காலை வேலு தனது பைக்கில் நிவேதாவை அழைத்துக்கொண்டு வேலூர் நோக்கி சென்றார்.
கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி பைக் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நிவேதா மீது பின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேலு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது.
தகவல் அறிந்த வடக்கு போலீசார் விரைந்து சென்று நிவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் தேடினர். ரத்தினகிரி பகுதியில் சென்ற லாரியை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






