என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டு சென்ற தாய்
- சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது
- கேமராப்பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு
வேலூர்:
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை சிகிச்சைக்கு அனுமதித்துவிட்டு தாய் தலைமறைவாகி விட்டார். மேலும் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8-ந் தேதி ரத்தினகிரி பகுதியை சேர்ந்த சங்கீதா(25) என்பவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளுடன் வந்தார்.
அங்கு சங்கீதா பிறந்து 10 நாட்களே ஆன தனது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் என்று கூறி குழந்தைகள் நல பிரிவு மருத்துவரை அணுகினார்.
டாக்டர்கள் குழந்தையை உள் நோயாளியாக அனுமதித்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குழந்தை அபாய கட்டத்தில் உள்ளதாக டாக்டர்கள் தாய் சங்கீதாவிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த குழந்தை நேற்றிரவு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழிந்தது. அப்போது, இந்த தகவலை அந்த குழந்தையின் தாயிடம் டாக்டர்கள் தெரிவிக்க வந்துள்ளனர். ஆனால் சங்கீதா மருத்துவமனையில் இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ ஊழியர்கள் அவரை அங்கு தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மருத்துவ அதிகாரிகள் சங்கீதா அளித்த முகவரியை பதிவேடுகளில் ஆய்வு செய்தனர்.
ஆனால் அந்த முகவரி போலியானது என தெரிந்தது. இதையடுத்து இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்துள்ளனர்.
மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் உள்ள கண்கானிப்பு கேமராப்பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் அளிக்க மருத்துவ மனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






