என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கன்சால் பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்சால்பேட்டையில் 46 குடும்பத்தினர் வெளியேற உத்தரவு
- அதிகாரிகள் ஆய்வு
- வேலூரில் மழை வெள்ளத்தால் பாதிப்பு
வேலூர்:
வேலூர் கோட்டை பின்புறம் உள்ள கன்சால்பேட்டை இந்திரா நகர் பகுதிகளில் கால்வாய் சாலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மழைக்காலங்களில் நிக்கல்சன் கால்வாயில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள் ஆண்டுதோறும் அவதி அடைந்து வருகின்றனர். இதனை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
கன்சால் பேட்டையில் 46 குடும்பத்தினர் சாலை ஆக்கிரமிப்பில் வீடு கட்டி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அப்துல்லாபுரத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கன்சால்ப்பேட்டை பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில் ஆகியோர் கன்சால் பேட்டையில் வெள்ளம் பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்குள்ள 46 குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். அவர்களுக்கு அப்துல்லாபுரம் பகுதியில் வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது.அங்கே சென்றால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாழ முடியும்.
கன்சால் பேட்டையில் தொடர்ந்து குடியேற முடியாது.இங்கே இருந்தால் சாக்கடை மற்றும் மழை வெள்ளத்தால் உங்களது சந்ததியினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே எதிர்கால நலன் கருதி அந்த இடத்தை காலி செய்து விட்டு அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு குடியேற வேண்டுமென கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.






