search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் ஊராட்சி செயலாளரிடம் 2 பவுன் சங்கிலி அபேஸ்
    X

    பெண் ஊராட்சி செயலாளரிடம் 2 பவுன் சங்கிலி அபேஸ்

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பாலீஷ் செய்து தருவதாக கூறி மோசடி

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 53). கணவரை இழந்த அவர் தனியாக தம்பி வீட்டில் வசித்து வருகிறார்.

    உமாராணி தோளப்பள்ளி கிராம ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 11.30 மணிக்கு வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை வீட்டு வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்தார். வீட்டு வாசலில் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் டிப்டாப் உடையில் நின்றிருந்தனர்.

    அவர்கள், உமாராணியிடம் வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரங்களை கொடுத்தால், உங்கள் கண் எதிரே சிறிது நேரத்தில் பளிச்சென மாற்றி தருவதாக கூறினர்.

    இதை நம்பிய அவர் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை எடுத்து வந்து கொடுத்துள்ளார். வாலிபர்கள் கூறியபடியே சிறிது நேரத்தில் பாத்திரங்களை பளிச்சென மாற்றி கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள், இதேபோல் வெள்ளிப்பொ ருட்களையும் பாலீஷ் செய்து தருவோம், என்றனர். உடனே உமாராணி தன்னிடம் இருந்த வெள்ளி கால் கொலுசை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். வெள்ளிக்கொலுசையும் அவர்கள்' பளிச்சென மாற்றி கொடுத்தனர்.

    இந்தநிலையில் வாலிபர்கள், தங்க நகைகளில் அழுக்கை நீக்கி புதிய நகை போல் பாலீஷ் செய்து தருவோம், என்றனர்.

    இதைக்கேட்ட உமாராணி தான் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கழற்றி வாலிபர்களிடம் கொடுத்துள்ளார். வாலிபர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் ரசாயனத்தை கலந்து, தங்க சங்கிலியை போட்டுள்ளனர். அப்போது வாலிபர்கள், உமாராணியிடம் பேசியபடியே அந்த பாத்திரத்தில் இருந்து தெரியாமல் சங்கிலியை திருடி கொண்டு, பாத்திரத்தில் சங்கிலி இருப்பதாக கூறி அவரிடம் கொடுத்து விட்டு, திடீரென அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.

    பாத்திரத்தில் தங்க சங்கிலி இருப்பதாக நினைத்துக்கொண்ட உமாராணி, வீட்டுக்குள் எடுத்துச் சென்று பார்த்தபோது, அதில் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தாம் மோசம் போய் விட்டோம் என்பதை உணர்ந்த உமாராணி, வீட்டுக்கு வெளியே வந்து சத்தம்போட்டு கத்தியவாறு வாலிபர்களை பின்தொடர்ந்து ஓடி உள்ளார்.

    ஆனால் அவர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து உமாராணி, பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×