search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் கவர்னர் மீது பழி சுமத்தக்கூடாது- வானதி சீனிவாசன்
    X

    ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் கவர்னர் மீது பழி சுமத்தக்கூடாது- வானதி சீனிவாசன்

    • ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
    • அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட தலைவர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்ற ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதவில்லை என்பதை அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கல்வி என்பது நல்ல நிலையில் இருந்தாலும் அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் விகிதம் குறைந்துள்ளது.

    அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள், நல்ல விளையாட்டு மைதானம், இலவசமாக பொருட்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் அரசு பள்ளிக்கு ஏன் மாணவர்கள் செல்வதில்லை. அங்கு தேர்ச்சி விகிதமும், மாணவர் சேர்க்கையும் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை கொண்டு வரும்போது இந்த சட்டத்தில் உள்ள பிரச்சினைகள், நீதிமன்றத்தில் செல்லுபடியாகுமா என்பது போன்ற கேள்விகளை தான் கவர்னர் கேட்டுள்ளார். உண்மை நிலையை புரிந்துகொண்டு மக்களை பாதுகாக்க வேண்டிய விஷயத்தில் தனிப்பட்ட சுயலாபத்துக்காக கவர்னர் மீது பழி சுமத்தக்கூடாது.

    அரசு இதனை கவுரவ பிரச்சினையாக பார்க்காமல் கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து சட்டத்தை பலமாக கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும்.

    அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட தலைவர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணியில் சிக்கலை உருவாக்கும். இதுதொடர்பான தகவல்கள் தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு கடந்த வாரம் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரி வந்தபோது அனைத்து பா.ஜ.க. தலைவர்களையும் அழைத்து இனிமேல் இதுபோன்ற எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை அளித்துள்ளார். வரும் காலத்தில் இவையெல்லாம் சரியாகி விடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×