என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை
- குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா வேப்பில அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் .இவரது மனைவி சீதா (வயது 42). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு 1 மகள் 3 மகன்கள் உள்ளனர்.
இவர் மகள் வித்யாவை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த கடவர அள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி மகன் சக்திவேல் (26) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் சக்திவேல் மனைவி வித்யா பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார். இவர் மேலும் படிக்க வேண்டும் என்று கணவரிடம் கேட்டபோது அதற்கு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த வித்யா கடந்த மாதம் 20-ம் தேதி கோபித்துக் கொண்டு வேப்பில அள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இருந்து வந்த அவர் கடந்த 22-ம் தேதி விஷம் குடித்து விட்டதாக தன் தாய் சீதாவிடம் கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வித்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மகேந்தி ரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி தாலுகா கேத்தி ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (46). இவருக்கு திருமணம் ஆகி 3 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது 2-வது மகள் முருகம்மாள் (22) என்பவருக்கு 10 மாதங்களுக்கு முன்பு நைனா கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் அசோக் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். அவ்வப்போது மாமியார்-மருமகள் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த முருகம்மாள் கடந்த 4-ம் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மொரப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






