search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் சிக்கிய 2 ஐம்பொன் சிலைகள் மதுரையில் இருந்து கடத்தப்பட்டதா?- போலீசார் விசாரணை
    X

    கடலூரில் சிக்கிய 2 ஐம்பொன் சிலைகள் மதுரையில் இருந்து கடத்தப்பட்டதா?- போலீசார் விசாரணை

    • மகிமைதாஸ் என்பவரிடம் 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் பதுக்கி வைத்து ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி செய்வதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஐ.ஜி தினகரன் மேற்பார்வையில், கூடுதல் சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரேமா சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக்கேயன், முருகபூபதி, பாண்டியராஜன், செல்வராஜ், சந்தனகுமார், ஏட்டு பரமசிவன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கடத்தல்காரர்களில் ஒருவனிடம் 'எங்களுக்கு பழமையான சாமி சிலைகள் வேண்டும், கோடிக்கணக்கில் பணம் தரத் தயார்' என்று தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த நபர் பெயர், முகவரி மற்றும் விலாசத்தை கொடுத்து உள்ளார். தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் இருப்புகுறிச்சியை சேர்ந்த மகிமைதாஸ் என்பது தெரியவந்தது. அவரிடம் 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    அவரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் விருத்தாச்சலம், பெரியகோட்டிமுளையை சேர்ந்த பச்சமுத்து என்பவர் ஐம்பொன் சிலைகளை கொடுத்து விற்பனை செய்ய சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஈரோடு, கொடுமுடியில் பதுங்கி இருந்த பச்சமுத்துவை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து நடராஜர் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர் போலீசாரிடம் மேற்கண்ட சிலைகளை அரியலூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கொடுத்து விற்க சொன்னதாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து மதுரை சரக சிலை திருட்டு தடுப்பு தனிப்படை போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மதுரை கோவிலில் இருந்து கடத்தப்பட்டதா? எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீட்கப்பட்ட சாமி சிலைகள்.

    Next Story
    ×