search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி கம்பரசம் பேட்டையில் - பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமையும் பறவைகள் பூங்கா
    X

    திருச்சி கம்பரசம் பேட்டையில் - பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமையும் பறவைகள் பூங்கா

    • திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திருச்சி கம்பரசம் பேட்டையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கப்படுகிறது.
    • காவிரியில் வெள்ளம் வந்தால் இந்த பகுதி பாதிக்கப்படாமல் இருக்க உரிய அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திருச்சி கம்பரசம் பேட்டையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ரூ. 13 கோடியே 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது திருச்சி - கரூர் நெடுஞ்சாலையை ஒட்டி, காவிரி கரையோரத்தில், 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகளை இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இதில் பறவைகள் தங்குமிடம் 60 ஆயிரம் சதுர அடியில் அதன் நல்வாழ்வை உறுதிசெய்ய காற்றோட்டம் மற்றும் இயற்கை விளக்குகளை எளிதாக்கும் வெளிப்படையான கண்ணிகளுடன் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது.

    இதில் தீக்கோழிகள் மற்றும் அரிய வகை பறவைகள் உட்பட பலதரப்பட்ட கவர்ச்சியான பறவை இனங்களை பாதுகாக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட உள்ளது. இதுவும் தஞ்சாவூரில் உள்ள ராஜாலியின் பறவை பூங்காவைப் போன்று பெரிய அளவில் அமைய உள்ளது.

    இந்த பறவைகள் பூங்கா உள்ளூர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உருவாகிறது. காவிரியில் வெள்ளம் வந்தால் இந்த பகுதி பாதிக்கப்படாமல் இருக்க உரிய அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    இந்த பூங்காவின் பறவைக் கூடத்திற்குள், மரங்கள் மற்றும் செயற்கை குளங்களுக்கு மத்தியில் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுவது புதிய அனுபவமாக இருக்கும்.

    மேலும் இங்கு 50 பேர் அமரும் திறன் கொண்ட ஒரு மினி தியேட்டர் அமைய உள்ளது. இதில் அறிவியல் ஆவணப்படங்கள் திரையிடுவதற்கும், பறவையியல் குறித்த குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர சிற்றுண்டிச்சாலை, சிமெண்ட் அணுகு சாலை மற்றும் சுமார் 60 கார்கள் மற்றும் 100 பைக்குகளுக்கான பார்க்கிங் வசதிகளும் செய்யப்படுகிறது. இந்த கட்டுமான பணிகளை ஒரு வருட காலத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    இந்த பூங்கா அமைவதால் திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட வழித்தடத்தின் வடிவமைப்பை மாற்றியமைத்து நீட்டிக்க மாவட்ட நிர்வாகம் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×