search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மாவட்டத்தில் ஆர்வமுடன் நீட் தேர்வு எழுத  வந்த மாணவர்கள்
    X

    திருச்சி மாவட்டத்தில் ஆர்வமுடன் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

    • இந்த மையங்களில் 7 ஆயிரத்து 386 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
    • தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட எந்தப்பொருளையும் எடுத்துவரக்கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது

    திருச்சி:

    பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய அளவிலான நுழைவு தேர்வு (நீட் தேர்வு) நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

    திருச்சி மாவட்டத்தில் இதற்காக, ஓஎப்டி மற்றும் பொன்மலை கேந்திரிய வித்யாலாயா பள்ளிகள், ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, சாரநாதன் கல்லூரி, காவேரி குளோபல் பள்ளி, சமது மேல்நிலைப்பள்ளி, சிறுகனூர் எம்.ஏ.எம். கல்லூரி, துடையூர் மகாலட்சுமி கல்லூரி, கமலா நிகேதன் பள்ளி, கே.கே.நகர் ஆல்பா விஸ்டம் பள்ளி, கைலாசபுரம் ஆர்.எஸ்.கே. பள்ளி, தொட்டியம் தோளூர்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரி, மணப்பாறை சவுமா பப்ளிக் பள்ளி ஆகிய 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த மையங்களில் 7 ஆயிரத்து 386 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர். மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு அறைக்குள் காலை 11.40 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    மேலும் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட எந்தப்பொருளையும் எடுத்துவரக்கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது. அதற்கேற்றவாறு மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்தனர். குறிப்பாக திருச்சி காஜாமாலையில் சமது மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு காலை 10 மணி முதலே மாணவ, மாணவிகள் வரத்தொடங்கினர்.

    பெரும்பாலானவர்கள் தங்களது பெற்றோர்களுடன் தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர். முன்னதாக ஹால் டிக்கெட்டை கோவிலில் வைத்தும், பூஜை அறையில் வைத்தும், பெற்றோர் காலில் விழுந்து ஆசி வாங்கியும் தயாரானார்கள். தேர்வு மையங்களுக்கு வந்திருந்த மாணவிகள் தாங்கள் கையோடு எடுத்து வந்த மதிய உணவை சாப்பிட்ட பிறகே மையத்திற்குள் சென்றனர்.

    அவர்களின் ஹால் டிக்கெட் சோதனை செய்து சரிபார்க்கப்பட்டது. பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றுமாறு தேர்வு மையத்தினர் கூறியதையடுத்து மாணவிகள் அதனை அகற்றி தங்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சரியாக 1.30 மணிக்குள் அனைவரும் தேர்வு மையங்களுக்குள் சென்றுவிட்டனர். 2 மணிக்கு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×