search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரிகளில் பி.காம். படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள்
    X

    கல்லூரிகளில் பி.காம். படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள்

    • கல்லூரிகளில் பி.காம். படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
    • 300 இடங்களுக்கு 5 ஆயிரத்திற்கும் விண்ணப்பங்கள்

    திருச்சி:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேர்வதற்காக கல்லூரிகளை தேர்வு செய்து வருகிறார்கள். மேலும் என்ன படித்தால் எந்த வேலைக்கு செல்லலாம் என ஆர்வமாக ேதடித்தேடி கல்லூரி படிப்புகளை முடிவு செய்கிறார்கள்.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், அரசு கல்லூரிகள் உள்ளிட்டவைகளில் மாணவ-மாணவிகள் ஆர்வமாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற படிப்பை தேர்வு செய்து விண்ணப்படிவங்களை கல்லூரிகளுக்கு நேரிலும், இணையதளம் மூலமாகவும் அனுப்பி வருகின்றனர்.

    இதில் பி.காம் பட்டப்படிப்பிற்கு அதிக அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் அதிக அளவிலான மாணவ-மாணவிகள் பி.காம். பட்டப்படிப்ைப தான் தேர்வு செய்வதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து திருச்சி ஜமால் முகமது கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடந்த மாதம் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தததில் இருந்து கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்படிவங்களை அளித்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் உள்ளிட்டவைகளை படிப்பதற்கு அதிக முன்னுரிமை அளிப்பது வழக்கம்.

    ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கல்லூரி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் பி.காம். பட்டப்படிப்பில் சேர்வதில் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது வரை ஆயிரத்திற்கும் மேல் எங்கள் கல்லுரியில் பி.காம். படிப்பில் சேர விரும்புவர்களின் விண்ணப்ப படிவங்கள் வந்து குவிந்துள்ளது.

    பி.காம். பட்டப்படிப்பை அதிகம் அவர்கள் ஏன் விரும்புகிறார்கள் என்று ஆராயும் போது, பி.காம். இளநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு முதுநிலையில் சி.ஏ., சி.எஸ்., எம்.பி.ஏ., எம்.காம். உள்ளிட்ட படிப்புகளை படித்து நல்ல உயர்ந்த இடத்திற்கு வேலைக்கு செல்லவும், தங்களது வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ளவும் தேர்வு செய்துள்ளதாக மாணவர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் இதுபோன்ற படிப்புகளை படித்து முடிப்பதால் நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து அதிக வருவாய் கிடைக்கும் வழியை ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். கிராமப்புறத்தில் உள்ளவர்கள் குறிப்பாக பி.ஏ., பி.எஸ்சி. படித்துவிட்டு கல்லூரி படிப்பை நிறைவு செய்தால் நல்ல மதிப்பில் இருந்து வந்தனர்.

    அதேபோல் தற்போது பி.காம். பட்டபடிப்பிற்கு தான் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வங்கி போட்டித்தேர்வுகள், அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்தும் இருப்பதால் அனைவரும் பி.காம். படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தொழில் நுட்பவியல், நூண்ணுயிரியல் படிப்பிலும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே சேர்கிறார்கள் என்றார்.

    பிஷப்ஹீபர் கல்லூரி நிர்வாகத்தினர் கூறும்போது, இந்த ஆண்டு கணிதம் மற்றும் வணிகவியல் படிப்பை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எங்கள் கல்லூரியில் பி.காம். படிப்பிற்கான இடம் 300 தான் உள்ளது. ஆனால் 5 ஆயிரத்திற்கும் மேல் மாணவ, மாணவிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர் என்று கூறினார்.

    Next Story
    ×