என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சியில் நாளை புற்றுநோய் கண்டறியும் மெமோகிராம் பரிசோதனை முகாம்
- திருச்சியில் நாளை இன்னர்வீல் சங்கம் சார்பில் புற்றுநோய் கண்டறியும் மெமோகிராம் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது
- புற்றுநோய் வந்து விட்டாலே மரணம் என்ற நிலை மாறி சிகிச்சை அளித்து குணப்படுத்தும் அளவுக்கு மருத்துவ உலகம் முன்னேறிவிட்டது
திருச்சி:
திருச்சி மலைக்கோட்டை இன்னர்வீல் கிளப், திருச்சி தென்னூர் இந்து மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் மார்பக புற்றுநோயை கண்டறியும் மெகா மெமோகிராம் பரிசோதனை முகாம் திருச்சி தென்னூர் இந்து மிஷன் ஆஸ்பத்திரியில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 4-ந்தேதி வரை தொடர்ச்சியாக நடக்கிறது.
இந்த முகாம் சாதனை நிகழ்வாக ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட உள்ளது. தங்கமயில் ஜூவல்லரி முதன்மை இயக்க அதிகாரி ரோட்டேரியன் வி.விஷ்வா நாராயணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவங்கி வைக்கிறார்.
திருச்சி இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவர் வள்ளியம்மை முத்துராமன் முன்னிலை வைக்கிறார்.
தலைவர் கவிதா நாகராஜன், செயலாளர் மீனா சுரேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதில் கின்னஸ் சாதனை பதிவாளர் டிராகன் ஜெட்லி கலந்து கொண்டு முகாம் நிகழ்வுகளை பதிவு செய்கிறார்.
இது பற்றி விஷ்வா நாராயணன் கூறும்போது, பெண்களை அதிகம் பாதிக்கும் புற்று நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்றாக இருக்கிறது.
புற்றுநோய் வந்து விட்டாலே மரணம் என்ற நிலை மாறி சிகிச்சை அளித்து குணப்படுத்தும் அளவுக்கு மருத்துவ உலகம் முன்னேறிவிட்டது.
இதில் வருமுன் காப்போம் என்பதுதான் முக்கியமானது. புற்றுநோய் வருவதற்கு முன்பே அதன் அறிகுறிகளை கண்டறிந்து ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயின் பிடியிலிருந்து முழுமையாக விடுதலை பெற முடியும்.
அந்த வகையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் மெமோகிராம் பரிசோதனை முகாம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை தாய்மார்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.






