search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீரங்கத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்
    X

    ஸ்ரீரங்கத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்

    • இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அதற்கு மாற்றாக வடக்கு தேவித்தெருவில் புதிய பூ மார்க்கெட் கட்டப்பட்டது.
    • இதுவரை அந்த பூ மார்க்கெட் முழுமையாக செயல்பட்டுக்கு வரவில்லை. அங்கு கடை எடுத்துள்ள வியாபாரிகள், மாலை கட்டும் இடமாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் தொடர்ந்து இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அதற்கு மாற்றாக வடக்கு தேவித்தெருவில் அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பூ மார்க்கெட் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பூ மார்க்கெட் முழுமையாக செயல்பட்டுக்கு வரவில்லை. அங்கு கடை எடுத்துள்ள வியாபாரிகள், மாலை கட்டும் இடமாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மாநகராட்சி சார்பில் தெற்கு தேவித்தெருவில் உள்ள பூ மார்க்கெட்டை மேம்படுத்துவது, அப்பகுதியில் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைப்பது தொடர்பாக அமைச்சர் நேரு, கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் சாத்தார வீதி, புதிய பூ மார்க்கெட் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    பூ மார்க்கெட்டை இடம் மாற்றுவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகள், இடவசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், இது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிட்டார்.

    இது குறித்து மாநகராட்சி வட்டாரங்களில் கேட்ட போது சாத்தார வீதியில் உள்ள பூ மார்க்கெட், அதன் அருகில் உள்ள தெற்கு தேவித் தெரு ஜெ.ஜெ திருமண மண்டபம் முன்பாக ஏற்கனவே கட்டி முழுமையாக செயல்பாட்டுக்கு வராமல் உள்ள பூ மார்க்கெட்டுக்கு மாற்றப்பட உள்ளது. இதற்காக அருகிலுள்ள மாநகராட்சி இடத்தையும் சேர்த்து (மீன் மார்க்கெட் இடம்) வியாபாரிகளுக்கு தேவையான வசதிகள், அமைப்புகள் குறித்து கேட்டறிந்து பூ மார்க்கெட் விரிவுபடுத்தப்படும்.

    மேலும், அதே பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஜெ ஜெ திருமண மண்டபம் இடிக்கப்பட்டு அங்கு ஒரு ஏக்கரில் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட கடைகள் தனித்தனி வளாகமாக கொண்ட ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி வருவாயை பெருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டத்தை எந்த நிதியிலிருந்து மேற்கொள்வது மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். விரைவில் அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    முன்னதாக ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ள அரசு மருத்துவமனை எதிரில் உள்ள இடத்தில் முன்னேற்பாடுகளையும் அமைச்சர் நேரு பார்வையிட்டார்.

    ஆய்வின் போது மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்டலக் குழுத் தலைவர் ஆண்டாள், நகரப் பொறியாளர் (பொ) சிவபாதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×