என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமண மதம் பரப்பிய தீர்த்தங்காரம் சிற்பம் கண்டுபிடிப்பு
    X

    சமண மதம் பரப்பிய தீர்த்தங்காரம் சிற்பம் கண்டுபிடிப்பு

    • திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த தீர்த்தங்காரம் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது
    • தீர்த்தங்கரர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றி சமண சமயக் கோட்பாடுகளை நாடு முழுவதும் பரப்பியுள்ளனர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே பிள்ளாதுறை பகுதியில் கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற கணேசன் என்பவர் இந்த தீர்த்தங்கரர் சிற்பத்தை கண்டுபிடித்துள்ளார். தற்போது இந்து சமய அறநிலையத் துறையில் திருச்சி மண்டல தொல்லியல் ஆலோசகராக பணியாற்றும் இவர் இப்பகுதியில் உள்ள திருக்கோயில்களை ஆய்வு செய்தார்.

    அப்போது தீர்த்தங்கரர் சிற்பம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தா.பேட்டையில் இருந்து வடமலைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் செல்லாண்டி அம்மன் கோயிலுக்கு அருகே சாலையின் வடபுறம் தீர்த்தங்கரர் சிற்பம் காணப்படுகிறது. இக் கண்டுபிடிப்பு பற்றி தொல்லியல் ஆய்வாளர் கணேசன் கூறியதாவது:

    கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் தமிழ்நாடு முழுமையும் சமண சமயம் பரவியிருந்தது. பசி என்று வருவோருக்கு உணவளித்தல், அச்சம் கொண்டு வருவோருக்கு அடைக்கலம் அளித்தல், நோய்களுக்கு மருத்துவம் செய்தல், அறியாமையில் உள்ளவர்களுக்கு அறிவு கல்வி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்ட சமண சமய சான்றோர்களே தீர்த்தங்கரர்கள். அத்தகைய தீர்த்தங்கரர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றி சமண சமயக் கோட்பாடுகளை நாடு முழுவதும் பரப்பியுள்ளனர்.

    அவ்வாறு தோன்றிய 24 தீர்த்தங்கரர்களின் ஒருவர் தான் இங்கு கண்டு பிடிக்கப்பட்ட தீர்த்தங்கரர் சிற்பம் ஆகும். தீர்த்தங்கரர்கள் நிர்வாண கோலத்தில் நின்ற நிலையில் அல்லது தியான கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுவார்கள்.

    இங்கு கண்டு பிடிக்கப்பட்ட தீர்த்தங்கரர் தியான கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. மூன்று உலகங்களுக்கும் தலைவர் என்பதை உணர்த்தும் வகையில் தலைக்குமேல் மதி நலம் அளிக்கும் வளங்கொழு முக்குடை வடிக்கப்பட்டிருக்கிறது.

    தீர்த்தங்கரர் சிற்பங்கள் அருகில் அவர்களில் பாதுகாவலர்களாக விளங்கிய இயக்கனும், இயக்கியும் இடம்பெற்றிருக்கும். இங்குள்ள தீர்த்தங்கரர் வலதுபுறம் இயக்கனும், இடதுபுறம் இயக்கியும் புடைப்பு சிற்பங்களாக அமைக்கப் பட்டுள்ளன. இயக்கனும், இயக்கியும் ஆடைஅணிகலன்கள் அணிற்கு காட்சிஅளிக்கின்றனர். தீர்த்தங்கரர் மட்டும் முக்தி நிலை அடைந்ததால் அருவுருவாக மாறும் நிலையில் நிர்வாண கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    கி.பி. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 17-ம் நூற்றாண்டு வரை சமணம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டது. அவ்வப்போது பௌத்தம், ஆசீவகம், சைவம், வைணவம், போன்ற சமயங்களினால் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் கி.பி. 17-ம் நூற்றாண்டு வரை சமணம் தமிழ்நாட்டில் இயங்கியுள்ளது.

    கி.பி. 1-ம் நூற்றாண்டில் இளஞ்சேரலிரும்பொறை என்ற சேர மன்னனும், நத்தி என்ற பொன் வாணிகனும், நாகன், கீரன் கொற்றி போன்ற பொது மக்களும் சமண சான்றோர்களுக்கு மலைக் குகைகளில் உறைவிடத்தை அமைத்துக் கொடுத்துள்ளது தமிழ் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

    தமிழ்நாட்டில் கரூர், புகழிமலை, கழுகுமலை, பூலாங்குறிச்சி, சித்தன்னவாசல், குளித்தலை, ஜவர்மலை, உண்டான்கல்பாறை போன்ற பல இடங்களில் சமணத்தின் வரலாற்று தடயங்கள் பரவி இருக்கின்றன. அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டு வரலாற்றில் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்ள முடியும். இங்குள்ள தீர்த்தங்கரர் சிற்பத்தை நோக்கும்போது கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தலாம் என்றார்.

    Next Story
    ×