search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலாண்டு தேர்வு நெருங்கும் நிலையில் திருச்சி மாவட்ட அரசு பள்ளிகளில் பாடப்புத்தகம் வழங்கில் தாமதம் - பாடங்களை படிப்பதில் மாணவர்கள் கலக்கம்
    X

    காலாண்டு தேர்வு நெருங்கும் நிலையில் திருச்சி மாவட்ட அரசு பள்ளிகளில் பாடப்புத்தகம் வழங்கில் தாமதம் - பாடங்களை படிப்பதில் மாணவர்கள் கலக்கம்

    • தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்ததால் ஒருசில இடங்களில் சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்ததால் ஒருசில இடங்களில் சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    மேலும் சில அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த படிக்க வைத்தும் வருகிறார்கள். அந்த அளவிற்கு அரசு பள்ளியில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் சென்று வருகிறார்கள்.

    இதற்கிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஒரு மாத காலமாக பாடப்புத்தகம் வழங்கப்படாமல் இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் காலாண்டு தேர்வு வர இருப்பதால் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து திருச்சி அரசு பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், பொதுவாக வசதி படைத்தவர்கள் தங்களின் குழந்தைகளை பணம் செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். படிக்காத கூலி வேலை ெசய்யும் பாமர மக்கள் மட்டும் தான் அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை அனுப்பும் நிலை இன்னும் ஒரு சில இடங்களில் மாறாமல் தான் உள்ளது.

    அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதமே வழங்க வேண்டிய புத்தகம் இன்னும் பள்ளிகளில் படிக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகள் மூலமாகவும், குறிப்புகள் மூலமாகவும் தான் பாடம் கற்பித்து வருகிறார்கள்.

    பாடப்புத்தகம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. காலாண்டு தேர்விற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. கடைசி நேரத்தில் புத்தகத்தை வழங்கினால் மாணவர்கள் எவ்வாறு படித்த நல்ல மதிப்பெண் பெறமுடியும். குறிப்பாக பீமநகர் அரசு பள்ளி, பொன்மலைப்பட்டி அரசு பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் எதுவுமே வழங்கப்படாமல் உள்ளது.

    தனியார் பள்ளியில் படிப்பவர்கள் பணம் கொடுத்து தாங்கள் படிக்கும் பாடப்புத்தகங்களை பெற்று கொள்வார்கள். ஆனால் அரசு பள்ளியில் ஏழை எளிய மாணவ, மாணவிகள் அதை எப்படி பெற்று கொள்ள முடியும். ஆகவே புத்தகம் வழங்கப்படாமல் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு விரைந்து புத்தகங்களை வழங்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, புத்தகங்கள் இன்னும் சென்னையில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு வரவில்லை. அவைகள் வந்த உடன் விரைவில் புத்தகம் வழங்காமல் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×