search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் இன்று காலை தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் மோதி ரெயில்வே ஊழியர் பலி
    X

    திருச்சியில் இன்று காலை தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் மோதி ரெயில்வே ஊழியர் பலி

    • திருச்சியில் இன்று காலை தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் மோதி ரெயில்வே ஊழியர் பலியானார்
    • திருமணமாகி 10 மாதங்களில் பரிதாபம்

    திருச்சி:

    திருச்சி மாநகர பகுதிகளில் அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி ஜங்ஷன் நோக்கி இன்று காலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்ஸை ஸ்ரீரங்கம் கண்டியூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 48) என்பவர் ஓட்டி வந்தார். சரவணன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.இந்த பஸ் பாரதியார் சாலையில் 3 தனியார் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதியில் வந்த போது திடீரென்று விபத்தில் சிக்கியது.

    பள்ளி முன்பு அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில்அதிவேகமாக வந்ததால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து அந்த பஸ் அதே வேகத்தில் சென்று சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னலை இடித்து தள்ளியது.அதோடு நிற்காமல் அந்தப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ரெயில்வே ஊழியர் மீதும் மோதியது. அதன் பின்னரும் அந்த பஸ் நிற்காமல் அங்குள்ள பிரியாணி கடையினை இடித்து கொண்டு அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு தனியார் பஸ்சின் மோதி நின்றது.

    இந்த விபத்தில் ரெயில்வே ஊழியர் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் பலியானார். இறந்தவர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 35) என்பது தெரிய வந்தது. ரெயில்வேயில் உதவி அலுவலராக பணியாற்றி வந்த அவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் மோகன்ராஜ் தனது மனைவி பிரியாவுடன் விபத்து நடந்த பகுதியில் உள்ள ரெயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்த ரெயில்வே குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு நல்ல தண்ணீர் வசதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இதனால் அவர்கள், எதிர்ப்புறம் உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள மாநகராட்சி பொதுக்குழாயில் காவிரி ஆற்று தண்ணீர் பிடித்து குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர். வழக்கம்போல் இன்று காலை பிளாஸ்டிக் குடத்தில் மோகன்ராஜ் தண்ணீர் பிடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சுந்தர்ராஜ், கண்டக்டர் சரவணன் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். விபத்தை ஏற்படுத்திய அந்த பஸ்சின் முன் பகுதி பெருமளவு சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்ஸில் குறைந்த அளவு பயணிகள் இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜீம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக பஸ் வந்த போது நிலை தடுமாறி பிரேக்குக்கு பதிலாக பதட்டத்தில் ஆக்சிலேட்டரை கொடுத்த காரணத்தால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. டிரைவரை பிடித்து விசாரித்தால் தான் உண்மை தெரியும் என்றனர். தாறுமாறாக ஓடிய பஸ் மோதி ரெயில்வே ஊழியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


    Next Story
    ×