என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை விரிவாக்கத்திற்காக அகற்றிய மரங்களை சாலையோரம் நட வேண்டும்
- சாலையோரம் 4,000 மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
- சாலையோரம் மரங்கள் நடப்படாவிட்டால் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பிரவீன்குமார் தலைமையில் நிர்வாகிகள், நேற்று ஓசூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் செந்தில்குமாரிடம், கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
"ஓசூர் முதல் சானமாவு வரை நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதையொட்டி அந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதனால் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, 1மரம் வெட்டினால், 10 மரம் நட வேண்டும் என்ற அரசு விதிப்படி, அந்த பகுதியில் சாலையோரம் 4,000 மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்". இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக்கொள்ள ப்பட்டுள்ளது.
பின்னர், பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறுகையில், " 4,000 மரங்களை காட்டுப்பகுதியில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. சாலையோரம்தான் மரங்கள் நடவேண்டும். அவ்வாறு சாலையோரம் மரங்கள் நடப்படாவிட்டால் 1 வார காலத்திற்கு பிறகு, சாலைப்பணிகளை தடுத்து நிறுத்தி, மரங்களை நட்டபிறகு பணிகளை தொடர வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பாண்டியன், அனில்குமார், ஆண்ட்ரூ சார்லஸ், அம்ருத், சரத் சங்கர், தாவூத் இப்ராகிம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






