search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி

    • அல்போன்சா, நீலம் மற்றும் செந்தூரா போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • தத்துப் பூச்சிகள் பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் உதிர்ந்துவிடும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 32 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தோதாபுரி, அல்போன்சா, நீலம் மற்றும் செந்தூரா போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    பருவ நிலை மாற்றத்தினாலும் பூக்கும் பருவத்தில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலாலும் மா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

    மா பூத்திருக்கும் இந்த நிலையில் விவசாயிகளிடயே மா பயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டாயம் வேண்டும்.

    டிசம்பர்-ஜனவரி மாதங்களில் மா மரங்கள் பூக்கும் நிலையில் பூக்களைத் தாக்கும் தத்துப் பூச்சிகள் பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் உதிர்ந்துவிடும்.

    இதனை கட்டுப்படுத்திட தைமீத்தோஸாம் 0.20 கிராம்- ஒரு லிட்டர் தண்ணீர் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மரம் பூ பூக்க ஆரம்பிக்கும் காலத்திலிருந்து 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

    அடுத்து ஏப்ரல் மாதத்தில் பிஞ்சு காய்களை சேதப்படுத்தக்கூடிய புழுக்களான மா இலைப்புழு மற்றும் காவனப் புழுக்களை கட்டுப்படுத்திட அசாராக்டின் 1500 பி.பி.எம். 4 மில்லி-1 லிட்டர் தண்ணீர் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

    பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து மா மகசூலைப் பாதுகாத்திட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர், காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை ஆகிய 6 வட்டாரங்களில் நாளை (வியாழக்கிழமை) முதல் 10-ந் தேதி வரையில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி அந்தந்த வட்டார அளவில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை வட்டார அலுவலர்களை தொடர்பு கொண்டு பயிற்சியில் பங்கு பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×