search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலகாபாத் மியூசியத்தில் செங்கோல் இருந்ததை கண்டுபிடிப்பதற்கு நான்கு மாதங்கள் ஆனது- உம்மிடி சகோதரர்
    X

    உம்மிடி சுதாகர் மற்றும் அவரது மகன் உம்மிடி பாலாஜி பேட்டி அளித்தனர்

    அலகாபாத் மியூசியத்தில் செங்கோல் இருந்ததை கண்டுபிடிப்பதற்கு நான்கு மாதங்கள் ஆனது- உம்மிடி சகோதரர்

    • 1947-ம் ஆண்டு இந்த செங்கோலை மூதறிஞர் ராஜாஜி கூறியதின் பெயரில் திருவாவடுதுறை ஆதீனம் எங்களிடம் செய்யச் சொன்னார்.
    • 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் நிறுவப்படுவது எங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கே பெருமை.

    சென்னை:

    ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவிற்கு 1947-ம் வருடம் சுதந்திரம் கிடைத்து நேரு பிரதமராக பதவியேற்றபோது அவரது கையில் செங்கோல் ஆட்சி பரிமாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்டது. அந்த செங்கோலை சென்னையைச் சேர்ந்த உம்மி பங்காரு சகோதரர்கள் உம்மி டி. எத்திராஜ், உம்மிடி சுதாகர் ஆகியோர் செய்தனர். 75 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த செங்கோல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பிரதமரால் வைக்கப்படுகிறது. இந்த விழாவில் சென்னையில் இருந்து உம்முடி சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் டெல்லி சென்று கலந்து கொள்கிறார்கள்.

    இதுகுறித்து தியாகராய நகரில் உள்ள அவர்களது கடையில் உம்மிடி சுதாகர் அவரது மகன் பாலாஜி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    1947-ம் ஆண்டு இந்த செங்கோலை மூதறிஞர் ராஜாஜி கூறியதின் பெயரில் திருவாவடுதுறை ஆதீனம் எங்களிடம் செய்யச் சொன்னார். மூன்றாம் தலைமுறையான நானும் எனது சகோதரன் மற்றும் 12 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டோம்.

    அவர்கள் கூறிய டிசைனில் இதை தயார் செய்தோம் செய்து முடிக்க ஒரு மாதம் ஆனது. முழுக்க முழுக்க கைத்தொழிலாகவே இதை செய்தோம். மெஷின் பயன்படுத்த விடவில்லை. அப்போது அதன் மதிப்பு ரூ.15,000 ஆகும். இப்போது மதிப்பு சுமார் இரண்டு லட்சம் இருக்கும். இந்த செங்கோல் அலகாபாத் மியூசியத்தில் இருந்ததை கண்டுபிடிப்பதற்கு 4 மாதங்கள் ஆனது.

    75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் நிறுவப்படுவது எங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கே பெருமை.

    இந்த பெருமைமிக்க விழாவில் எங்கள் குடும்பத்தினர் 15 பேர் பங்கேற்கிறோம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மிகப்பெரிய ஒரு வரலாற்றை இந்த சம்பவம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    எங்களது நிறுவனத்தின் சார்பில் பல செங்கோல்களை செய்துள்ளோம். ஆனால் இதில் கிடைத்த பெருமை கவுரவம் எங்களுக்கு வேறு இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×