என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை மார்க்கெட் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கோலப்பொடிகள்.
நாளை மார்கழி மாத பிறப்பு நெல்லையில் கோலப்பொடிகள் விற்பனை மும்முரம்
- இறை வழிபாட்டுக்கு உகந்த மாதமாக திகழ்வது மார்கழி மாதம்.
- இம்மாதத்தில் கோவில்களில் அதிக அளவில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதுடன் பொதுமக்கள் வீட்டின் முன்பும் கோலமிட்டும் வருவார்கள்.
நெல்லை:
இறை வழிபாட்டுக்கு உகந்த மாதமாக திகழ்வது மார்கழி மாதம்.
இம்மாதத்தில் கோவில்களில் அதிக அளவில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதுடன் பொதுமக்கள் வீட்டின் முன்பும் கோலமிட்டும் வருவார்கள். பல்வேறு வீடுகளின் முன்பு வண்ணகோலங்கள் வரைந்து மாட்டுச்சாணம் மற்றும் பூசணிப்பூக்களை வைப்பது வழக்கம். மார்கழி மாதத்தை தொடர்ந்து தைப்பொங்கலை முன்னிட்டும் வீடுகளில் மட்டுமின்றி தெருக்களில் கோலமிடுவது வழக்கமாக உள்ளது. நாளை மார்கழி மாதம் பிறப்பதையொட்டி நெல்லை மாவட்டத்தில் கோலப்பொடிகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோலப்பொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாகி வருகிறது. மேலும் சேலம், மதுரை, கர்நாடாக மாநிலம் பெங்களூர் ஆகிய இடங்களில் வெள்ளை கோலப்பொடிகள் வாங்கி அவற்றில் சிகப்பு, பச்சை, மஞ்சள், நீளம் என பல்வேறு வர்ணங்கள் கலந்து 16 வர்ணங்களில் கலர் கோலப்பொடிகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
சிலர் மணலிலும் வண்ண சாயங்கள் கலந்து விற்கின்றனர். மார்கழி மாதம் பிறப்பதை தொடர்ந்து பாளை மார்க்கெட் டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட நெல்லை மாநகர பகுதிகளிலும் திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட மாவட்டத்தில் பல இடங்களிலும் விற்பனைக்காக பாக்கெட் வடிவில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான ஒரு பாக்கெட் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப கிலோ கணக்கிலும் வாங்கி செல்கிறார்கள்.
மார்கழி மாத பிறப்பால் கோலப்பொடிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.






