என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாக்கடை கால்வாயில் சிக்கிய குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றுவதை நகராட்சி தலைவர் பரிதாநவாப் பார்வையிட்ட போது எடுத்தபடம்.
திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கிருஷ்ணகிரியில் சாக்கடை கால்வாய்களை ஒட்டி கம்பி வலை போட நடவடிக்கை எடுக்கப்படும்
- நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தினர்.
- குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சியில் சாக்கடை அடைப்பு தூர்வாரும் பணி, நகராட்சி தலைவர் முன்னிலையில் நடந்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வீடுகளுக்குள் மழை நீர் புகுவதை தடுக்க, சாக்கடை கால்வாய்களை தூர்வாரி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி நகராட்சியில் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ள
சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பரிதாநவாப் முன்னிலையில், நேற்று சேலம் சாலை, ஜக்கப்பன் நகர், பழைய சப்-ஜெயில் சாலை, பழையபேட்டை காந்தி சாலை, புதுப்பேட்டை மார்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பை எடுக்கும் பணி நடந்தது.
மேலும், அப்பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நகராட்சி தலைவர் உத்தரவிட்டதையடுத்து, கொட்டும் மழையிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து நகராட்சி துப்புரவு அலுவலர் ரமணச்சந்திரன் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் உதவியகுமார், துப்புரவு பணி மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும், திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சாக்கடை கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கிரில் கம்பி வலை போட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






