என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு  முடிவு கட்ட வேண்டும்  - தம்பிதுரை எம்.பி.பேச்சு
    X

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் - தம்பிதுரை எம்.பி.பேச்சு

    • அ.தி.மு.க.சார்பில், ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • முனுசாமி எம்.எல்.ஏ, மற்றும் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை எம்.பி. ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

    ஓசூர்,

    தமிழ்நாட்டில் மின்கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ, மற்றும் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை எம்.பி. ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

    ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார்.

    மாவட்ட அவைத்தலைவர் சிபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.சி.வி.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிழக்கு பகுதி செயலாளர் ராஜி வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, தம்பிதுரை எம்.பி.பேசியதாவது:- திராவிட இயக்கத்தை உருவாக்கிய பெரியார், அண்ணா மற்றும் அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குடும்பத்திலிருந்து வாரிசு என்று யாரும் கிடையாது.

    அவர்களுக்கு நாம் தான் வாரிசுகள்.உதயநிதியை அடுத்த முதல்வர் ஆக்குவதற்காக, இப்போது அவரை அமைச்சராக்கி மு. க. ஸ்டாலின் பட்டாபிஷேகம் செய்து விட்டார்.

    தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு, தமிழக மக்கள் முடிவு கட்ட வேண்டும். குடும்ப அரசியலையும், ஊழலையும் ஒழிக்க வேண்டும். இதனால் தான் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது.நீட் தேர்வை கொண்டுவந்ததே தி.மு.க.வும், காங்கிரசும்தான். ஆனால் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும்". இவ்வாறு அவர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

    தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் மதன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் நாராயணன், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில்தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர். வாசுதேவன் நன்றி கூறினார்.

    Next Story
    ×