search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் கலைஞர் நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
    X

    மதுரையில் கலைஞர் நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

    • பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1500 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
    • அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி கூடியது. அன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.

    இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) பட்ஜெட் தாக்கலுக்காக சட்டசபை மீண்டும் கூடியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு திருக்குறள் வாசித்து சபையை தொடங்கி வைத்தார்.

    சபாநாயகர் அப்பாவு பேசுகையில், 2023-24-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் வரிசையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முன் வரிசையில் வந்து நிதி நிலை அறிக்கையை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    இதையடுத்து 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    தமிழகத்தில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்ற பெருமையுடன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக பாதுகாப்புக்கும் அரசு முக்கியத்துவம் தருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    உக்ரைன் போர், உலக அளவிலான பொருளாதார சிக்கல் நடப்பு நிதியாண்டிலும் தொடர்கிறது. என்றாலும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

    மத்திய அரசை விட தமிழக அரசு நிதி பற்றாக்குறையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்திருக்கிறோம்.

    கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு, பெரு வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காரணமாக தொடர்ந்து நிதிநெருக்கடி ஏற்பட்டது. என்றாலும் நாம் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சொத்து வரி வருவாய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    என்றாலும் தமிழகத்தில் அனைத்து சமூக நல திட்டங்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வளர்ச்சி பெறுவதற்கு உறுதி செய்திருக்கிறோம். தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதை அனைத்து துறைகளிலும் உறுதி செய்திருக்கிறோம்.

    டாக்டர் அம்பேத்கர் படைப்புகள் அனைத்தும் தமிழ்மொழியில் மொழி பெயர்க்கப்படும். தமிழகத்தில் விரைவில் சர்வதேச தமிழ் கணினி மாநாடு நடத்தப்படும். சென்னை சங்கமம் நிகழ்ச்சி மேலும் 8 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் 25 இடங்களில் நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். தஞ்சையில் சோழர்கால அருங்காட்சியகம் உருவாக்கப்படும்.

    தமிழகத்தில் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக ரூ.233 கோடி செலவில் 3,959 வீடுகள் கட்டி கொடுக்கப்படும். 591 வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இலவச பயணத்துக்கு அனுமதி வழங்கப்படும். 211 தொழிற்சாலைகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    வடசென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய நவீன பன்னோக்கு பிரிவு செவிலியர் விடுதி போன்றவை ரூ.147 கோடி செலவில் கட்டப்படும். கிண்டியில் கருணாநிதி பெயரில் புதிய பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும்.

    மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும்.

    பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1500 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மருத்துவ துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக ராணுவ வீரர்களுக்கான கருணைத்தொகை இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.40 லட்சமாக அதிகரித்து வழங்கப்படும்.

    அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தக கண்காட்சி நடத்தப்படும். ஐ.ஏ.எஸ். தேர்விற்கு படிக்கும் 1000 பேருக்கு நிதியுதவித் தொகை வழங்கப்படும். பள்ளி கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மதுரையில் பிரமாண்டமாக அனைத்து நவீன வசதிகளுடன் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இது கலைஞர் நூலகம் என்று அழைக்கப்படும். இந்த நூலகம் வருகிற ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

    சென்னை அம்பத்தூரில் இளைஞர்கள் நலனுக்காக மாநில திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும்.

    அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பாளையம்கோட்டை சித்த மருத்துவம் கல்லூரிக்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.110 கோடி செலவில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×