search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் முதல்-அமைச்சர் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக இருக்க வேண்டும்
    X

    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் முதல்-அமைச்சர் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக இருக்க வேண்டும்

    • பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை
    • ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி கிரிவல ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    இது குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் :-

    தமிழகத்தில் அதிக அளவில் ஆன்மீக மக்களே உள்ளனர். 38 வருவாய் மாவட்டங்களில் அதிகளவில் ஆன்மீக மக்கள் வருகை தரும் மாவட்டங்க ளில் திருவண்ணாமலையும் ஒன்றாகும்.

    சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல- அமைச்சர், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதற்கு உதாரணம் கார்த்திகை தீபத்தின் போது 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பாதுகாப்பாக திரும்ப சென்றனர் என்று பெருமையாக பேசினார்.

    கார்த்திகை தீபப் பணியை அடிப்படையாகக் கொண்டு சித்ரா பவுர்ணமிக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து செயல்பட வேண்டும்.

    இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கூறியது போன்று கோவிலில் வரிசையை நீளம் செய்தால் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருட்டு போன்ற செயல்கள் நடைபெறுவது தவிர்க்கப்படும்.

    சித்ரா பவுர்ணமி கோடை வெயிலில் வருவதால் குடிநீர் வசதியை கூடுதல் செய்ய வேண்டும். தூய்மை அருணை போன்ற தன்னார்வலர்கள் அமைப்பினர்களை கொண்டு அதிகளவில் நீர், மோர் பந்தல்கள் அமைக்கலாம்.

    அன்னதானம் வழங்கும் இடத்தில் உணவை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வழங்குவதை உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்து அதனை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் சித்ரா பவுர்ணமியொட்டி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் பெற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    கோவில் வளாகத்திற்குள் இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனை கருவிகளுடன் கூடிய அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.

    மேலும் சித்ரா பவுர்ணமி பணிகளை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்து அவர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் முதல்- அமைச்சர் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், இந்து சமய அறநிலைத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையாளர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,, திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் வார்டு கவுன்சிலர் கார்த்தி வேல்மாறன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் அருணாச லேஸ்வரர் கோவில் இணை ஆணையர் குமரேசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×