என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் படுத்திருக்கும் மாடுகள்.
சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக புகார்
செங்கம்:
செங்கம் நகரில் திருவண்ணாமலை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போளூர் சாலை, ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரிகின்றது.
மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவிலேயே மாடுகள் படுத்து ஓய்வெடுப்பதால் வாகனங்கள் செல்ல வழி இல்லாத சூழல் நிலவுகிறது.
சாலையில் நடந்து செல்வோர் மீது பல சமயங்களில் மாடுகள் முட்டி மோதுகின்றது. இதனால் பெண்கள், சிறுவர்கள், முதியோர் என பலதரப்பட்ட மக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படும் சூழல் நிலவுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்து ஓய்வெடுப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்துக்கள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளுக்கும், மாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
மாடுகளினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும் அவ்வப்போது பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் மூலம் மாடுகளை பிடிப்பதும் மீண்டும் உரிமையாளர்கள் மாட்டினை மீட்டு சென்று அதனை சாலையிலேயே மீண்டும் விட்டு விடுவதும் செங்கம் பகுதியில் வாடிக்கையாகி வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து செல்ல வேண்டும் எனவும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதியில் உள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.






