என் மலர்
உள்ளூர் செய்திகள்

40 வீடுகளை காலி செய்யக்கோரி பொதுப்பணித்துறை நோட்டீஸ்
- நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளதால் நடவடிக்கை
- எம்.எல்.ஏ. வை முற்றுகையிட்டு புகார் மனு
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அருகே உள்ள மட்டவெட்டு ஏரி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள பூமி பூஜை போடுவதற்காக சரவணன் எம்.எல்.ஏ. நேற்று காலை சென்றார். அப்போது காஞ்சி மதுரா சுண்ணாம்பு கால்வாய் பகுதியைச் சேர்ந்த 40 மேற்பட்ட பெண்கள் எம்.எல்.ஏ வை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் நாங்கள் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பெரிய ஏரிக்கு அருகில் 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் பொதுப்பணி துறை நீர்வள ஆதாரத்துறையின் கீழ் காஞ்சி பெரிய ஏரி உள்ளது.
நாங்கள் வீடு கட்டி வாழ்ந்து வரும் நாள் முதல் இதுவரை இந்த ஊராட்சியை சேர்ந்த யாரும் ஆட்சேபனை செய்யாத நிலையில் செங்கம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடமிருந்து நீர் பிடிப்பு பகுதியில் வீடு கட்டி உள்ளதை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்று தெரிவித்தனர்.
மேலும் நீர் பிடிப்பு பகுதி என்றால் எங்களுக்கு தெரிந்தவரை நாங்கள் இருக்கும் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் எந்த வித பராமரிப்பு திட்டமும் செய்யாத நிலையில் தற்போது மட்டும் எப்படி நீர்ப்பிடிப்பு பகுதி ஆகிவிடும் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய சரவணன் எம்.எல்.ஏ. அனைத்து மாவட்டத்திலும் நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் நீங்கள் வசிக்கும் பகுதி நீர் பிடிப்பு பகுதியாக இல்லை என்றால் அதிகாரிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் அனைவரும் தைரியமாக இருங்கள் என்று தெரிவித்தார். அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.






